கோட்டைமேட்டு தெருவில் கழிவு நீரால் நடக்க முடியல
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் கோட்டை மேட்டு தெருவில் ரோடு, வீடுகள் அருகே குளம் போல கழிவு நீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றத்தால் ரோட்டில் நடக்க முடியல என மக்கள் புலம்புகின்றனர்.ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் 2011 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும் சரிவர பராமரிக்கப்படாமல் குழாய்கள் சேதமடைந்து, அடைப்புகள் காரணமாக கழிவுநீர் வீடுகள், ரோட்டில் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. கடந்த சில நாட்களாக நகராட்சி 1-வது வார்டு கோட்டை மேட்டுத் தெருவில் மெயின் ரோட்டில் குளம் போல கழிவுநீர் தேங்கியுள்ளது. துர்நாற்றத்தால் குழந்தைகள், முதியவர்கள் அடிக்கடி காய்ச்சல், வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படுகின்றனர். கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் டெங்கு அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதுதொடர்பாக பல முறை புகார் அளித்தும் பெயரளவில் கழிவுநீரை உறிஞ்சு எடுக்கின்றனர். மீண்டும் அன்று இரவே குளம் போல தேங்கிவிடுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.