| ADDED : ஏப் 30, 2024 10:36 PM
உத்தரகோசமங்கை -ராமநாதபுரம் மாவட்டத்தின் பாரம்பரிய பூர்வீக நெல் ரகங்கள் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் கல்லுாரி மாணவி ஈடுபட்டுள்ளார்.உத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கை ஊராட்சி கோனேரி கிராமத்தில் நாட்டுப்புற நெல் ரகத்தின் முக்கியத்துவம் குறித்து மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி தாமரைச்செல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.மாணவி தாமரைச்செல்வி கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக நாட்டு ரக நெல் வகைகளாக பூங்காரு, துாயமல்லி, குழிபறிச்சான், முருங்கைக்கார், கல்லுருண்டைக்கார், 110, நொங்கான், சித்திரைகார், குறுவைக்களஞ்சியம், அறியான், அறுபதாம் குருவை, சிகப்பு சித்திரைக்கார், கருப்பு கவுனி, வரப்பு கொடஞ்சான் உள்ளிட்ட அரிய வகை ரகங்கள் இங்கிருந்து பிற பகுதிகளுக்கு சென்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.எல்லா காலத்திலும் நன்கு வளரக்கூடிய திறன் கொண்ட வறட்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து ஸ்திரத்தன்மையுடன் வளரக்கூடிய பக்குவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நாட்டுரக நெல்களுக்கு உள்ளது.இயற்கை உரத்தில் விளைவிக்கக் கூடிய இவ்வகை நெல் ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் படங்களுடன் விவரித்து வருகிறோம். திருப்புல்லாணி ஒன்றியத்தில் 8 கல்லுாரி மாணவிகள் விவசாய ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் மூலம் ஒவ்வொரு விவசாயிகளிடமும் கலந்துரையாடும் போது நமக்குள்ள விஷயங்களை தெரியப்படுத்தவும் விவசாயிகளிடமிருந்து கிடைக்கக்கூடிய அனுபவ அறிவை பெற்றுக் கொள்ளவும் களப்பயணம் உறுதுணையாக அமைகிறது. குயவன்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பேராசிரியர் விஞ்ஞானி வள்ளல் கண்ணன் தலைமையில் பல்வேறு குழுக்களாக மாணவிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.நாட்டு ரக நெல் குறித்த பல தகவல்கள் விவசாயிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.