| ADDED : ஜன 17, 2024 12:21 AM
கமுதி : ராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடை சமயத்தில் பெய்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு ரூ.பலஆயிரம் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கமுதி அருகே பாப்பனம் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் பெய்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகிய நிலையில் விதைப்பதற்கு கூட ஒருபடி நெல்லு கிடைக்காமல் போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கமுதி அருகே பாப்பனம், நகரத்தார்குறிச்சி, அபிராமம், வல்லந்தை, நரியன் சுப்புராயபுரம், அகத்தாரிருப்பு உட்பட அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000 ஏக்கருக்கு அதிகமாக நெல் விவசாயம் செய்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தண்ணீரில் முழ்கி வீணாகியது.பாப்பனம் விவசாயி சாந்தி கூறியதாவது: கமுதி அருகே பாப்பனம், நகரத்தார் குறிச்சி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நெல் விவசாயம் செய்திருந்தனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பயிர்கள் நன்கு வளர்ந்தது. விவசாயத்தில் அதிகம் லாபம் தரும் என்று நினைத்திருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையில் பயிர்கள் முழுவதும் மழைநீரில் மூழ்கி வீணாகியது. நகைகள் அடகு வைத்து ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்தும் ஒரு படி நெல்லு கூட வராமல் வீணாகியுள்ளது. தற்போது பயிர்கள் மீண்டும் முளைக்கத் துவங்கியது. பயிர்களை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.---