காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 2000 ஏக்கர் பயிர்கள்: விவசாயிகள் வேதனை வேதனையில் விவசாயிகள்
சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் அமைந்த உச்சிநத்தம் மற்றும் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் காட்டாற்று வெள்ளத்தில் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அடித்துச்செல்லப்பட்டன.இம்மாவட்டத்தில் மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வரும் உபரியான வெள்ள நீர் காட்டாற்று வெள்ளமாக மாறி கஞ்சம்பட்டி ஓடை வழியாக உச்சிநத்தம், வி.சேதுராஜபுரம், முத்துராமலிங்கபுரம், வாலம்பட்டி, அன்னபூவன் நாயக்கன்பட்டி, டி. கரிசல்குளம், செவல்பட்டி, கொண்டு நல்லான்பட்டி, செஞ்சடைநாதபுரம், கொக்கரசன்கோட்டை, டி.எம்.கோட்டை உள்ளிட்ட கிராம விளைநிலங்களில் புகுந்து பயிர்களை மூழ்கடித்து அடித்து சென்றது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் 2000 ஏக்கரில் அதிகளவில் மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, சோளம், மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.கஞ்சம்பட்டி ஓடையில் இருந்து வெளியேறிய மிகுதியான வெள்ள நீர் சாகுபடி நிலங்களில் 3 அடி உயரத்துக்கு சூழ்ந்துள்ளது. மழை இல்லாத போது தொடர் வறட்சி இப்பகுதியில் ஏற்படுகிறது. மழை நேரங்களில் அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய வெள்ள நீரும் இங்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.இங்கிருந்து 20 கி.மீ.,ல் உள்ள கஞ்சம்பட்டி ஓடையை முறையாக வரத்து கால்வாய் வழித்தடங்களை துார்வாரினால் உடைப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம்.தற்போது கஞ்சம்பட்டி ஓடையில் பல இடங்களில் ஏற்பட்ட உடைப்புகளால் விளை நிலங்களிலுள்ள பயிர்களை வெள்ளம் அடித்து சென்றது.மேலும் உபரியான வெள்ள நீர் செவல்பட்டி வழியாக வேம்பார் மன்னார் வளைகுடா கடலில் கலந்து வீணாகிறது.ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்காலங்களில் இத்தகைய அவலம் தொடர்கிறது. நிரந்தர தீர்வாக கஞ்சம்பட்டி ஓடையை துார்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.