ஐந்திணை பூங்காவில் பார்வையாளர்களை கவர மலர் கண்காட்சி நடத்த வேண்டும்
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே அச்சடிபிரம்பு கிராமத்தில் ஐந்திணை மரபணு பூங்காவில் பார்வையாளர்களைக் கவர்வதற்கு மலர் கண்காட்சி நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2015ல் திறக்கப்பட்டது. பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறுவர் பூங்கா மற்றும் புல் தரை, தடாகம், ஓய்வுக்கூடம், கழிப்பறை வசதி உள்ளிட்டவைகளுடன் திகழ்கிறது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வருகின்றன. இந்நிலையில் பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்களை கவர்வதற்கான மலர் கண்காட்சி நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.பூங்காவுக்கு வந்திருந்த பொதுமக்கள் கூறியதாவது:ஐந்திணை பூங்காவின் பல்வேறு நடைபாதை தரைத்தளம் சேதமடைந்துள்ளது. பெருவாரியான கற்கள் பெயர்ந்துள்ளதால் பூங்காவிற்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி தவறி விழுந்து காயம் அடைகின்றனர். வரக்கூடிய பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை காலங்களை கழிப்பதற்காக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய மலர் கண்காட்சி நடத்த வேண்டும்.எனவே தோட்டக்கலைத் துறையினர் உரிய நிதி ஒதுக்கீடு செய்து மராமத்து பணிகளை செய்ய வேண்டும் என்றனர்.