உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கால்வாய்க்குள் அரசு பஸ் கவிழ்ந்து 24 பேர் காயம் மீட்க வந்த கிரேனும் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கால்வாய்க்குள் அரசு பஸ் கவிழ்ந்து 24 பேர் காயம் மீட்க வந்த கிரேனும் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தடுப்புச் சுவரை உடைத்து கால்வாய்க்குள் அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் காயமடைந்தனர். அதனை மீட்க வந்த கிரேனும் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி நேற்று அதிகாலை 1:20 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. மதுரை டிரைவர் கோபாலகிருஷ்ணன் 35, இயக்கினார். கண்டக்டராக வினோத் 35, இருந்தார். பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லுார் பள்ளி முன் அதிகாலை 2:45 மணிக்கு வந்தபோது நிலைதடுமாறி வலது பிரதான கால்வாய் தடுப்புச் சுவரை உடைத்து பஸ் கவிழ்ந்தது. அதில் பயணித்த 34 பேரில் டிரைவர் கோபாலகிருஷ்ணன் , பரமக்குடி மாலதி 45, கீழக்கரை பாலமுருகன் 29, மஞ்சூர் இம்மானுவேல் 36, ராஜபாளையம் உதவி பேராசிரியர் சுதன் 33, ராணி 37, பொன்மணி 31, சவுந்தர்யா 23, இனியா 15, உள்ளிட்ட 24 பேர் காயமடைந்து ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை பஸ்சை மீட்க வந்த கிரேன் கவிழ்ந்த சூழலில், ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இரண்டு கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, பஸ் மற்றும் கிரேன் மீட்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. பரமக்குடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி