பரமக்குடியிலிருந்து ராமேஸ்வரம் வரை விபத்து.. அதிகரிப்பு; நான்கு வழிச்சாலையாக மாற்றாததால் விபரீதம்
ராமநாதபுரம்: மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்ட போது பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வரை பணிகள் நடைபெறாமல் பத்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இப்பகுதிகளில் தொடர்ந்து விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. கொச்சியில் இருந்து தனுஷ்கோடி வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 49ல் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான பகுதியை நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்ய மத்திய அரசு 2014 ல் உத்தரவிட்டது. இத்திட்டத்திற்காக ரூ.1387 கோடி மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதில் முதல் கட்டமாக மதுரையில் இருந்து பரமக்குடி வரை 76 கி.மீ., சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்ய அப்போதைய மத்திய அமைச்சர் நிதின்கட்கரி 2015 ஜூலை 17 ல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதற்கென மத்திய அரசு ரூ.937 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி பரமக்குடி அடுத்த உரப்புளி வரை 76 கி.மீ., நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. பரமக்குடி- ராமநாதபுரம், ராமநாதபுரம்- ராமேஸ்வரம் வரையிலான சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படாமல் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 154 கி.மீ., சாலையில் தற்போது 76 கி.மீ., மட்டுமே நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம், ராமேஸ்வரம் வரை இருவழிச்சாலையாக மட்டுமே உள்ளது. பரமக்குடி அரியனேந்தல் பகுதியில் இருந்து இருவழிச்சாலை தொடங்குகிறது. வட மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் 4 வழிச்சாலையில் இருந்து திடீரென இரு வழிச்சாலையாக மாற்றப்படுவதால் அவர்களால் வாகனங்களை முறையாக இயக்க முடியாமல் தொடர்ந்து விபத்துக்களில் சிக்குகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள பரமக்குடி முதல் ராமேஸ்வரம் வரையிலான சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரமக்குடியில் இருந்து 60 மீட்டர் அகலத்தில் இருந்த நான்கு வழிச்சாலை 45 மீட்டராக அகலம் குறைக்கப்பட்டது.இதற்கான காரணமும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தெரிவிக்கப்படவில்லை. நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்ய தாமதம் ஏற்படும் பட்சத்தில் பரமக்குடி அரியனேந்தல் பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகையை நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க வேண்டும். அதில் நான்கு வழிச்சாலை இருவழிச்சாலையாக இங்கிருந்து மாற்றம் பெறுகிறது என ஹிந்தி, ஆங்கிலம், தமிழில் எழுதி வைக்கப்பட வேண்டும்.ராமநாதபுரம் வழக்கறிஞர் மாதவன் கூறுகையில், பெரும்பாலும் வட மாநிலங்களில் இருந்து இரவு வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக மூன்று மொழிகளில் எச்சரிக்கை பலகையாவது அமைக்க வேண்டும் என்றார். ----------