ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் அ.தி.மு.க., பா.ஜ., மலரஞ்சலி
ராமேஸ்வரம்: காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகளால் உயிரிழந்த சுற்றுலாப்பயணிகள் ஆன்மா சாந்தியடைய வேண்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் அ.தி.மு.க., பா.ஜ.,வினர் மலரஞ்சலி செலுத்தினர்.பஹல்காமில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் பா.ஜ.,வினர் மற்றும் அ.தி.மு.க., வினர் தனித்தனியாக மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன், ராமேஸ்வரம் நகர் தலைவர் மாரி, நிர்வாகிகள் ராமு, மலைச்சாமி, பாலாஜி மற்றும் அ.தி.மு.க., நகர் செயலாளர் அர்ச்சுனன், நகர் அவைத் தலைவர் குணசேகரன், நிர்வாகிகள் முனியசாமி, மீனாட்சி சுந்தரம், டாக்டர் இளையராஜா, மகேந்திரன், கஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி
திருவாடானை: இந்த கொடூர தாக்குதலில் உயிர்இழந்தவர்களுக்கு திருவாடானை தாலுகா அலுவலகம் முன்புள்ள விநாயகர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. எஸ்.டி.பி.ஐ., அஞ்சலி
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் பாம்பன், மண்டபம், வேதாளை, பெரியபட்டினம், ராமநாதபுரம், ஆர்.எஸ்.,மங்கலம்,சித்தார் கோட்டை, தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி கூட்டம் நடந்தது. பஹல்காம் பயங்கரவாதத்தை கண்டித்தும், ஜம்மு காஷ்மீரில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும், அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தினர்.