ராமநாதபுரத்தில் பார் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: உறவினர்கள் மறியல்
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் டூவீலரில் சென்ற பார் உரிமையாளரை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டினர். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டையை சேர்ந்த சிவசங்கரன் மகன் நிர்மல் 34. இவர் கிருஷ்ணாநகர் பகுதியில் மதுபான பார் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவரது பாரில் மது அருந்த வந்த ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த சிலருக்கும் நிர்மலுக்கும் தகராறு ஏற்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று பேச்சு வார்த்தையில் சமரசம் செய்து அனுப்பினர். இந்நிலையில் நேற்று மதியம் 1:30 மணிக்கு டூவீலரில் நிர்மல் கிழக்கு கடற்கரை சாலை தேவிபட்டினம் சந்திப்பு பகுதியில் சென்ற போது ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் 8 பேர் அரிவாளால் நிர்மலை வெட்டி சாய்த்தனர்.அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில் அவரது உறவினர்கள் நிர்மலை வெட்டியவர்களை கைது செய்யக்கோரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். 'போலீசார் முன்னிலையில் பேசும்போதே நிர்மலை வெட்டிக்கொலை செய்வோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி இருந்தும் போலீசார் மெத்தனமாக இருந்துள்ளனர். போலீசாரின் அலட்சியத்தால் இது நடந்துள்ளது' என அவர்கள் குற்றம் சாட்டினர். கைது செய்ய அவகசாம் வழங்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.ஆபத்தான நிலையில் நிர்மல் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.