ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் சுற்றி திரிந்த பீகார் சிறுவன் மீட்பு
ராமநாதபுரம்:ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் சுற்றி திரிந்த பீகார் சிறுவனை ஆதார் மூலம் அடையாளம் கண்டு மீட்ட சைல்டு லைன் அமைப்பினர் சொந்த ஊரான பீகார் மாநிலம் பாட்னாவிற்கு ஜூலை 19ல் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் 2024 ல் திரிந்த வடமாநில சிறுவனை சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்படைத்தனர். அச்சிறுவனிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தான்.அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் சிறுவன் 18 வயதிற்குட்பட்டவன் என தெரிந்தது. மேலும் மனநலமும் சற்று பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. கீழ் உள்ள சிறுவன் என்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் சிறுவன் ஆதார் மூலம் முகவரியை அறிய முயன்றார். ஆதார் பதிவுகளை தர முடியாது என இந்திய அரசின் தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்தது. பின் நீதிமன்ற உத்தரவிட்டதன்பேரில் ஆணையம் தெரிவித்த தகவலில் இருந்து சிறுவன் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் என தெரிந்தது. மேலும் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும் சிறுவன் அனுமதிக்கப்பட்டு மனநல பாதிப்பு குறித்து அறிக்கை பெறப்பட்டது.பாட்னா குழந்தைகள் பாதுகாப்பு அலகிடம் ஒப்படைத்து சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்க குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திட்டமிட்டுள்ளார். இதற்காக சிறுவன், அவருடன் செல்லும் பாதுகாவலர்களுக்கு ஜூலை 19 ரயிலில் டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.