ஊராட்சிகளில் நடக்கும் ஜல் ஜீவன் திட்ட பணிகளை முறையாக ஆய்வு செய்யுங்க பா.ஜ., போராட்டம் அறிவிப்பு
கடலாடி : கடலாடி ஒன்றியத்தில் பல கிராமங்களில் ஜல்ஜீவன் திட்டப்பணிகளை முறையாக ஆய்வு செய்து அதை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் முன் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் உள்ளூரிலேயே கிடைக்கக்கூடிய நீராதாரத்தின் மூலம் அப்பகுதி மக்களுக்கு தண்ணீரை வழங்குவது ஜல்ஜீவன் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக பல லட்சங்களை ஒவ்வொரு கிராமங்கள் தோறும் மத்திய அரசு ஒதுக்கி வருகிறது. இந்நிலையில் கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டும், பெயரளவிற்கு இத்திட்டத்தின் செயல்பாடு இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.கடலாடி அருகே மீனங்குடி ஊராட்சி நரசிங்ககூட்டம், கிடாக்குளம், சாத்தங்குடி, வெள்ளாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்திற்கான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தண்ணீர் வரத்தின்றி காட்சி பொருளாக உள்ளது. சாயல்குடியைச் சேர்ந்த பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் கோபால கிருஷ்ணன் கூறியதாவது:மத்திய அரசின் திட்டத்தை கிராமப் பகுதிகளில் முழுமையாக செயல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்திற்காக சம்பந்தப்பட்ட கிராமங்களில் ஒரு வீட்டிற்கு இணைப்பிற்கு ரூ.1000 விதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது ஒரு நாள் மட்டும் தண்ணீர் வருகிறது. இப்பகுதியில் தண்ணீர் பைப்புகள் பொருத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை தண்ணீர் வரவில்லை.குடிநீர் தட்டுப்பாடு உள்ள இக்கிராமங்களில் குடம் ரூ.12க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். திட்டத்தின் நோக்கம் கானல் நீராக மாறி வருகிறது. பெருவாரியான பைப்புகள் பொருத்தப்பட்டும் பயனின்றி அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. எனவே கடலாடி யூனியன் அதிகாரிகள் மற்றும் ஜல்ஜீவன் திட்ட அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.இதே நிலை தொடர்ந்தால் பா.ஜ., சார்பில் கடலாடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை விரைவில் நடத்த உள்ளோம் என்றார்.