பாம்பனில் மூழ்கியது படகு 5 மீனவர்கள் உயிர் தப்பினர்
ராமேஸ்வரம்: சூறாவளியால் பாம்பன் பாலம் அருகே விசைப்படகு கடலில் மூழ்கியது. இதில் 5 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.மீன்பிடி தடைகாலம் முடிய இன்னும் இரு நாட்களே உள்ளதால், ராமேஸ்வரம் அருகே மண்டபம் தெற்கு கடற்கரையில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க நேற்று ஒரு படகில் ஐந்து மீனவர்கள் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து மண்டபம் வடக்கு கடற்கரைக்கு சென்றனர்.அப்போது, பாம்பனில் வீசிய சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, ராட்சத அலையில் படகு சிக்கியது. படகின் அடிப்பகுதி மரப்பலகை உடைந்து, கடல்நீர் படகிற்குள் புகுந்ததால் படகு மூழ்க துவங்கியது. மீனவர்கள் கடலில் குதித்து நீந்தினர்.அப்போது, பாம்பன் கடற்கரையில் இருந்த நாட்டுப்படகு மீனவர்கள், ஐந்து மீனவர்களையும், மூழ்கிய படகை மற்றொரு விசைப்படகு மூலம் கயிறு கட்டி இழுத்து பாம்பன் கரைக்கு கொண்டு வந்தனர்.