ஜூன் 2ல் ராமேஸ்வரத்தில் படகுகள் ஆய்வு
ராமேஸ்வரம் : மீன்பிடி தடைக்காலம் முடிய இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் உள்ள 1200 விசைப்படகுகளை பழுது நீக்கி புதுப்பிக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். படகுகள் தரம், அரசு நிர்ணயித்த விதிமுறையில் இன்ஜின் குதிரை திறன், படகுகள் நீளம், அகலம் குறித்து நேற்று ஆய்வு செய்ய மீன்துறையினர் திட்டமிட்டிருந்தனர்.ஆனால் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் ஜூன் 2ல் படகுகளை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். ஆய்வின் போது படகு உரிமையாளரின் இரு புகைப்படம், ஆதார் கார்டு, குடும்ப அட்டை, படகு ஆர்.சி., புக், வங்கி கணக்கு புத்தகம், மீன்பிடி உரிமம் சான்றிதழ் ஆகியவற்றின் நகல் வழங்க வேண்டும் என மீன்துறையினர் தெரிவித்தனர்.