பரமக்குடி, எமனேஸ்வரம் ரோட்டில் குடிநீர் திட்ட குழாய்களில் உடைப்பு
தொற்று பீதியில் மக்கள்பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதி ரோட்டோரங்களில் குடிநீர் திட்ட குழாய்களில் உடைப்பு ஏற்படுவதால் பொதுமக்கள் தொற்று பீதியில் உள்ளனர். பரமக்குடியில் உள்ள 36 வார்டுகள் உட்பட அருகில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் செல்கிறது. இதன்படி பரமக்குடியில் பெரும்பாலான வார்டுகளில் குடிநீர் திட்ட குழாய்கள் சாக்கடைகளை ஒட்டியும், சாக்கடைகளை கடந்தும் செல்லும்படி இருக்கிறது. மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் செல்கிறது. இந்த குழாய்கள் பதிக்கப்பட்டு 10 முதல் 30 ஆண்டுகளை கடந்துள்ளது. இவற்றில் அவ்வப்போது உடைப்பு ஏற்படும் சூழலில் குடிநீர் விநியோகம் தடைபடுகிறது. மேலும் குடிநீர் திட்ட குழாய்களில் கழிவு நீர் கலப்பதால் இதனை அறியாமல் மக்கள் நேரடியாக குடிக்கின்றனர். இவற்றால் வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் தொற்று நோய்கள் உண்டாகிறது. ஆகவே குடிநீர் திட்ட குழாய்கள் கழிவுநீர் வாறுகால் அருகில் செல்வதை சீரமைக்க வேண்டும். மேலும் பல ஆண்டு களாக உள்ள குடிநீர் திட்ட குழாய்களை மாற்றி அமைக்க நகராட்சி மற்றும் காவிரி திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.