ராமேஸ்வரத்தில் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் துண்டிப்பால் அவதி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் கடந்த 3 நாட்களாக பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் சேவை துண்டிக்கப்பட்டதால் பயனாளிகள் பாதிக்கப்பட்டனர்.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தகவல் தொடர்பு சேவைகளின் முன்னோடியாக இருந்தது. காலப்போக்கில் தனியார் நிறுவன தகவல் தொடர்பு சேவைகள் அதிகரித்ததால் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பராமரிப்பு மந்தமானதால் தகவல் தொடர்பு சேவைகள் மோசமானது. இந்நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்., சேவையின் அலைபேசிகள், தரைவழி தகவல் தொடர்பு நெட்வொர்க் சேவை உள்ளது. கடந்த 3 நாட்களாக பி.எஸ்.என்.எல்., டவரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ராமேஸ்வரம் தீவு முழுவதும் அலைபேசி, தொலைபேசி, நெட்வொர்க் தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டது.இதனால் பயனாளிகள் தகவல் தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டதால் பலர் தனியார் தகவல் தொடர்பு நிறுவனத்திடம் புதிய சிம் கார்டுகள் வாங்கினர். இதனால் ராமேஸ்வரம் பகுதியில் பி.எஸ்.என்.எல்., பயனாளிகள் முற்றிலும் இல்லாமல் போகும் அவல நிலை உள்ளது.