கடலாடியில் பி.எஸ்.என்.எல்., சேவை 3 ஆண்டாக இல்லை தனியார் நிறுவனத்திற்கு மாறும் நிலை
கடலாடி: -கடலாடியில் 1995 முதல் இயங்கி வந்த பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மூன்று ஆண்டுகளாக தனது சேவையை நிறுத்தி உள்ளதால் இதனை நம்பியுள்ள வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனத்தின் சேவைக்கு மாறி வரு கின்றனர். கடலாடியில் வங்கிகள் மற்றும் தாலுகா வாரியான அரசுத் துறை அனைத்து அலுவலகங்களும் உள்ளன. பி.எஸ்.என்.எல்., சேவையை பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அதன் அலுவலகம் செயல்பாடின்றி உள்ளது. கடலாடி வர்த்தகர் சங்க செயலாளர் முனியசாமி கூறியதாவது : பல ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல்., இப்பகுதி மக்களுக்கு சேவையாற்றி வந்த நிலையில் அவற்றின் சேவை குறைபாட்டால் பெரும்பாலானோர் தனியார் நிறுவனங்களுக்கு மாறிவிட்டனர். இன்டர்நெட் இணைப்பு பெறுவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. சிக்னல் முறையாக கிடைக்காத நிலை தொடர்கிறது. இதனால் ஓ.டி.பி., உள்ளிட்டவைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே பி.எஸ்.என்.எல்., சேவை குறைபாடு உள்ளதால் இதனை நம்பியுள்ள ஏராளமான பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதுகுறித்து காரைக்குடி பி.எஸ்.என்.எல்., உயர் அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பி குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி உள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பி.எஸ்.என்.எல்., தடையின்றி கிடைப்பதற்கான வழிமுறையை செய்ய வேண்டும் என்றார்.