வாறுகால் பணியால் 10 நாட்களாக கீழக்கரை பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வருவதில்லை பயணிகள் அவதி
கீழக்கரை :கீழக்கரை நகராட்சி பஸ் ஸ்டாண்டிற்குள் ஏர்வாடி தர்கா, காஞ்சிரங்குடி, பெரியபட்டினம், திருப்புல்லாணி, வாலிநோக்கம், சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் வந்து செல்லும் நிலையில் பத்து நாட்களாக கீழக்கரை நகராட்சி பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் மும்முனை சந்திப்பில் இருந்து அண்ணாநகர் செல்லும் சாலை ஓரத்தில் வாறுகால் பணிக்காக கட்டுமான பணிகள் நடப்பதால் பஸ்கள் வருவதில்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் அரசு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதில் நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் 10 நாட்களாக கீழக்கரை ஏர்வாடி முக்கு ரோடு பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கி விடுகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது: ஒரு கி.மீ., முன்பே இறக்கி விடுவதால் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களை பயன்படுத்தி பொதுமக்கள் செல்லும் நிலை தொடர்கிறது. தற்போது அமைக்கப்பட்டு வரும் வாறுகால் பணியால் எவ்வித பயனும் இல்லை. அப்பகுதியில் கழிவுநீர் கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத நிலையில் பெயரளவிற்கு அமைத்து அரசு நிதியை வீணடிக்கின்றனர். கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: கீழக்கரை நகராட்சி வார்டு எண் 4ல் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் மழைநீர் வடிகால் வாறுகால் மற்றும் சிறுபாலம் அமைப்பதற்காக பணிகள் நடக்கிறது. சாலையோரங்களில் கொட்டப்படும் கட்டுமான பொருள்களால் பஸ்கள் அவ்வழியாக செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே செப்., 30 வரை பஸ்ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளன. இதுகுறித்து ராமநாத புரம் புறநகர் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்றனர்.