உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  உதவி இயக்குனர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

 உதவி இயக்குனர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அரசு உதவி பெறும் கல்லுாரில் உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு ரூ.33 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கல்லுாரி கல்வி உதவி இயக்குனர் உள்ளிட்ட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கமுதி கோட்டைமேட்டில் அரசு உதவி பெறும் கல்லுாரியான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லுாரி உள்ளது. இங்கு 2022-23 கல்வியாண்டில் 10 உதவி பேராசிரியர்கள், ஒரு நுாலகர் காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. வணிகவியல் துறையில் தற்காலிக உதவி பேராசிரியராக பணிபுரியும் மணிகண்டன் நிரந்தர பணி கோரி கல்லுாரி தேர்வுநிலை உதவியாளர் சத்தியநாதனை அணுகினார். அவர் கூறியதன் பேரில் மதுரை கல்லுாரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வைத்து அப்போது கண்காணிப்பாளராக இருந்த அங்குசெல்வத்திடம் (தற்போது திருநெல்வேலி கல்லுாரி கல்வி உதவி இயக்குநராக உள்ளார்.) இரு தவணையாக ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் தமிழ்துறை உதவிப் பேராசிரியர் மணிமேகலை, சத்தியநாதன் முன்னிலையில் அங்குசெல்வத்திடம் ரூ.20 லட்சமும், மணிமேகலையிடம் தனியாக கொடுத்த ரூ.3 லட்சமும் சேர்த்து ரூ.33 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் பணிநியமன ஆணை பெற்று தராததால் மணிகண்டன் பணத்தை திரும்ப பெற்றுள்ளார். இது குறித்து அவர்களிடையே பல முறை அலைபேசியில் பேச்சு நடந்துள்ளது. இந்த அலைபேசி உரையாடல்களின் அடிப்படையில் அங்குசெல்வம், சத்தியநாதன், அதே கல்லுாரி உதவி பேராசிரியர்கள் இருளாண்டி, மணிமேகலை மற்றும் மணிகண்டன் மீது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ