கணக்கில் வராத ரூ.2.56 லட்சம் பறிமுதல் பி.டி.ஓ., உட்பட மூவர் மீது வழக்கு
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே போகலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ. 2.56 லட்சம் பறிமுதல் செய்த நிலையில் பி.டி.ஓ., திருநாவுக்கரசு உட்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வசூலிப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு அறையில் இருந்து 1.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதே போல் அங்கு இருந்த ஒப்பந்ததாரர்களிடமிருந்து ரூ. 1 லட்சத்து 6000 உட்பட மொத்தம் ரூ. 2.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு 59, ஒப்பந்ததாரர்கள் பாஸ்கர பூபதி 54, மற்றும் பாஸ்கர் 50, ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.