சக்கரக்கோட்டை கண்மாயை துார்வார வலியுறுத்தல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை கண்மாய் 20 ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படாமல் பராமரிப்பின்றி ஆக்கிரமிப்புகளால் அடையாளத்தை இழந்து வருகிறது.இதனால் பறவைகளும் வாழ முடியவில்லை. விவசாயமும் அழிவதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாருவதற்கு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். சக்கரகோட்டை கண்மாய்24 கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய், ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் சக்கரக்கோட்டை கண்மாய் உள்ளது. இதில் தேங்கும் தண்ணீர் மூலம் ஆண்டுதோறும் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நெற்பயிர், பருத்தி சாகுபடி நடக்கிறது. தொடர்ந்து பராமரிப்பு இல்லாததால் ஆக்கிரமிப்புகளால் கண்மாய் நீர்பிடிப்பு பகுதி ஓடை போல மாறி வருகிறது. பறவைகள் வருகையும் குறைவு சக்கரகோட்டை கண்மாயில் நீர்பிடிப்பு பகுதியில் நாட்டுகருவேல மரங்கள் அதிகளவில் உள்ளதால் இங்கு மார்ச் மாதம் சீசன் நேரத்தில் ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன. இதையடுத்து பறவைகளை பாதுகாக்க வனத்துறை இப்பகுதியை சரணாலயமாக அறிவித்துள்ளது. ரூ.பல லட்சம் செலவில் தண்ணீரை தேக்க கண்மாயின் நடுவே பள்ளம் தோண்டி யுள்ளனர். ஆனால் தொடர் பராமரிப்பு இல்லாததால் நாட்டுக்கருவேல மரங்கள் அழிந்து தண்ணீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன.மேலும் போதிய தண்ணீர், மரங்கள் இல்லாததால் பறவைகள் வந்து செல்வது குறைந்துள்ளது. பாசன நீர்வரத்து வாய்க்கால் மாயம் சக்கரக்கோட்டை கண்மாயில் 1674ல் சேதுபதி மன்னர் காலத்தில் 14 மடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்மாய் நிறைந்தால் உபரிநீர் வெளியேற 1000 அடி நீள தெத்து அமைப்பும், மறுகால் வழியும் 16 கலுங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கண்மாய் தண்ணீரால் 2000 ஏக்கரில் விவசாயம் நடந்தது. ராமநாதபுரம் பகுதியில் பெய்யும் மழை நீர் மற்றும் பெரிய கண்மாய் உபரி நீர் கண்மாய்க்கு வருகிறது. கண்மாய் நீர்ப்பாசன கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் உருக்குலைந்து விட்டது. நீர்பிடிப்பு பகுதிகளும் ஆக்கிரமிப்பில் உள்ளன. மதகு ஷட்டர் இல்லாததால் தண்ணீர் வீணாகிறது. வரத்துக் கால்வாய் மேடாகி அடையாளம் தெரியாமல் போய்விட்டது. இதுகுறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை கலெக்டர் கே.பழனியாண்டி கூறியதாவது: சக்கரகோட்டை கண்மாய் தற்போது பொதுப்பணித்துறை, வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. ராமநாதபுரம், சக்கரகோட்டை, ஆர்.எஸ்.மடை, அம்மன்கோயில், தெற்குதரவை, வள்ளிமாடன் வலசை வழியாக சேதுக்கரை கடலில் கண்மாய் தண்ணீர் கலக்கிறது. 300 ஆண்டுகளுக்கு முன்பு சேதுபதி மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் இன்றும் உள்ளன. ஆனால் பொதுப்பணித்துறை மதகுகளில் ஷட்டர் இல்லை. இதனால் மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்க முடியாமல் வீணாக வாய்க்காலில் சென்று கடலில் கலக்கிறது. விளை நிலங்களில் தேங்குவதால் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். கண்மாயை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற பாசன விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. மாறாக விளை நிலங்களில் ரியல் எஸ்டேட் ஆதிக்கத்தால் நிறைய கட்டடங்கள் முளைத்துள்ளன. சக்கரகோட்டை கண்மாய் நீர்பிடிப்பு பகுதி, வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் ஆண்டுதோறும் இருபோகம் விளைச்சல் கிடைக்கும்.மதகுகளில் ஷட்டர்கள் பொருத்தி மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்கலாம். இதன் மூலம் பெரிய நீர்தேக்கமாக மாற்றினால் ராமநாதபுரம் நகர் மட்டுமின்றி 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், விவசாயிகள், கால்நடைகள் குடிக்கவும், குளிக்கவும் வழிவகை ஏற்படும். ஒரு பகுதியில் படகுசவாரி விட்டு கண்மாய்கரைகளில் நடைபாதை அமைத்து, சிறிய பூங்காக்கள் அமைத்து மிகச்சிறந்த பொழுது போக்கு சுற்றுலா தலமாக மாற்றலாம். இவ்வாறு அவர் கூறினார்.-------------