கரி மூட்டம் போடும் தொழில்: மழையால் பாதிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் கரிமூட்டம் தொழில் முடங்கியுள்ளதால் அத்தொழிலை நம்பியுள்ளோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் விவசாய நிலங்கள் மட்டுமின்றி வறட்சியால் பாதிக்கப்பட்ட தரிசு நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களின் விறகுகளை எரித்து கரி மூட்டம் போடும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்துார், கமுதி, சாயல்குடி, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இத்தொழில் அதிகமாக நடக்கிறது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் கரிமூட்டம் தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் உற்பத்தியாகும் கரி பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீமைக்கருவேல மரங்களை குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்கிறோம். அதுமட்டுமின்றி விறகு வெட்டுவது, கரியை பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளுக்கு கூலிக்கு ஆட்கள் நியமிக்கிறோம். இந்நிலையில் பருவமழை துவங்கியுள்ளதால் கரி மூட்டம் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளோம். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.