அலை சறுக்கு போட்டியில் சென்னை தடகள வீரர் 9-வது முறை சாம்பியன்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை கடலில் தேசிய அளவிலான அலைச்சறுக்கு(ஷர்பிங்) போட்டி நடந்தது. இதில் ஸ்டாண்ட் அப் பெடல் படகு போட்டியில் சென்னையை சேர்ந்த தடகள வீரர் சேகர் பட்சை 9--வது முறையாக தேசிய சாம்பியன் பட்டம் வென்றார்.பிரப்பன்வலசையில் இரு தினங்களாக நடந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கோவா, ஒடிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து 120 வீரர்கள் பங்கேற்றனர். அலை சறுக்கு போட்டியில் ஸ்பிரின்ட், தொழில் நுட்ப பந்தயம், டிஸ்டன்ஸ் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார். 4 கி.மீ., தொழில் நுட்ப போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த சேகர் பட்சை, பெண்கள் பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த டன்வி ஜெதீஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.மேலும் 12 கி.மீ., தொடர் இறுதி போட்டியில் இவர்கள் இருவரும் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர். 200 மீ., ஸ்பிரின்ட் போட்டியில் ஆண்கள் பிரிவில் சேகர் பட்சையும், பெண்கள் பிரிவில் ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை ஆனந்தி ஆர்த்தி ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.சென்னையை சேர்ந்த சேகர்பட்சை 9 முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இந்திய கடலோர காவல்படை மண்டபம் நிலைய கமாண்டர் வினய்குமார், இந்திய சர்ப்பிங் கூட்டமைப்பின் தலைவர் அருண் வாசு, எஸ்.பி., சந்தீஷ் பங்கேற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு ஐ.என்.எஸ்., பருந்து கடற்படை தளத்தின் நிலைய கமாண்டர் கேப்டன் அங்கூர் சைகல் பதக்கங்களை வழங்கினார்.