சென்னை கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் மார்ச் 7ல் முற்றுகை ரேஷன் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
ராமநாதபுரம்:தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 7 ல் சென்னையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. ராமநாதபுரத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் மாரிமுத்து, துணைத் தலைவர் தினகரன் கூறியதாவது:ரேஷனில் மக்களுக்கு சரியான எடையில் பொருட்கள் கிடைக்க புதிய எடை தராசு கருவிகளை வழங்கி விற்பனை முனைய கருவியோடு இணைக்கும் செயலி திட்டத்தைவரவேற்கிறோம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் போது சரியான எடையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.பணியாளர்களுடைய ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யக்கூடிய ஈ.பி.எப்., தொகை சரியான கணக்கில் மாநிலம் முழுவதும் ஒரே சீராக வரவு வைக்கப்படுவதில்லை. இதில் நடவடிக்கை வேண்டும்.பொது விநியோகத் திட்டத்திற்கு தனித் துறை, சரியான எடையில் பொட்டலங்களாக பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் அறிவுறுத்தலின்படி மார்ச் 7ல் மாநிலம் முழுவதும் பல ஆயிரம் பணியாளர்கள் இணைந்துசென்னை கூட்டுறவு துறை மாநிலப் பதிவாளர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன் அரசு நிர்வாகம் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். கோரிக்கைகளை தீர்வு காண வேண்டும் என்றனர்.