மழையால் அழுகிய மிளகாய் செடிகள்
முதுகுளத்துார்,: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 2 நாட்களாக பெய்த மழையால் மிளகாய் செடிகள் அழுகி வீணாகியது.முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5000 ஏக்கருக்கும் அதிகமாக மிளகாய் விவசாயம் செய்தனர். பருவமழை காலத்தில் கண்மாய், ஊருணியில் தேக்கி வைத்த தண்ணீரை மிளகாய் செடிகளுக்கு பாய்ச்சி வந்தனர். இதையடுத்து ஓரளவு செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்தது. தேரிருவேலி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிளகாய் செடியில் நோய் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 நாட்களாக முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் எதிர்பாராத அளவில் மழை பெய்தது. இதனால் நன்கு விளைச்சல் அடைந்து மிளகாய் காய்த்திருந்த நிலையில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி செடிகள் அழுகியும் மிளகாய் சோடையாகியது. மிளகாய் விவசாயம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே கிராமங்களில் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.