அரிய வகை உயிரினங்களை காப்பதற்கு வனத்துறை தொடர் கண்காணிப்பு தேவை
சாயல்குடி: சாயல்குடி வனச்சரணாலயத்திற்கு உட்பட்ட கண்மாய்கள் மற்றும் காப்பு காடுகளில் அதிகளவு அரிய வகை உயிரினங்கள் தங்களது வாழ்விடங்களாக கொண்டுள்ளன.எஸ்.தரைக்குடி, சாயல்குடி, கடலாடி, கடுகு சந்தை உள்ளிட்ட பகுதிகளில் ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் அதிகளவு அரிய வகை புள்ளி மான்கள் வசிக்கின்றன. முயல், நட்சத்திர ஆமை, உடும்பு, பாம்பு, நரி உள்ளிட்டவை அதிகம் வசிக்கும் நிலையில் இவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக இப்பகுதிக்கு வருகின்றன.இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு அரிய வகை உயிரினங்கள் உள்ளன. வேட்டையாடுவதை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சிலர் வேட்டை நாய்களை பயன்படுத்தி கண்மாய் பகுதியில் புகுந்து முயல் உள்ளிட்ட வன உயிரினங்களை வேட்டையாடுகின்றனர்.எனவே வனத்துறையினர், இவ்விடம் வனவிலங்குகள் உலவும் பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதி என்ற விபர போர்டு வைக்க வேண்டும். தண்ணீர் தேடி நகரப் பகுதிகளுக்குள் போகும் மான்களை கட்டுப்படுத்த தேவையான இடங்களில் வனப் பகுதிக்குள் தண்ணீர் தொட்டியை அமைக்க வேண்டும்.கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்களை நியமித்து கிராமத்தில் உள்ள தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து ரோந்து பணிகளை மேற்கொண்டால் சட்ட விரோதமாக வேட்டையாடுபவர்களை தடுக்கலாம் என்றனர்.