மண்டபத்தில் பயன்பாடின்றி முடங்கிய சுங்கத்துறை படகு
ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் சுங்கத்துறை ரோந்து படகு பயன்பாடின்றி முடங்கியதால், மத்திய அரசுக்கு ரூ. 20 லட்சம் வீணாகி போனது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, போதை மாத்திரைகள் கடத்திச் செல்வதும், இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகள் கடத்தி வருவது தடை இருந்தும் நடக்கிறது. இதனை தடுக்க 6 ஆண்டுக்கு முன் மண்டபம் சுங்கத்துறைக்கு ரூ. 20 லட்சம் மதிப்பில் அதிவேக ரோந்து படகு வழங்கப்பட்டது. இந்த படகில் இரு அதிவேக இன்ஜின் மூலம் ஒரு மணிக்கு 60 முதல் 80 கி.மீ., வேகத்தில் கடத்தல்காரர்களை பிடிக்கவும், 6 சுங்கத்துறை சிப்பாய்கள் அமரும் இருக்கை வசதியும் உள்ளது. ஆனால் இந்த படகில் 5 சதவீதம் கூட சுங்கத்துறையினர் ரோந்தில் ஈடுபடவில்லை. இப்படகை சுங்கத்துறை அலுவலகம் பின்புறம் நிறுத்தியே வைத்து பராமரிக்காததால் வெயில், மழையினால் இன்ஜின் பழுதாகி, படகு பலவீனமாகி சேதமடைந்து முடங்கியது. இதனையடுத்து ரோந்து படகை சுங்கத்துறையினர் அலுவலக வளாகத்திற்குள் நிறுத்தி உள்ளனர். இதனால் மத்திய அரசின் நிதி ரூ. 20 லட்சம் வீணாகியுள்ளது.