உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பால் படகு சேதம்: ரூ.1.25 கோடி இழப்பு

ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பால் படகு சேதம்: ரூ.1.25 கோடி இழப்பு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பால் ஆழ்கடல் விசைப்படகு கரை ஒதுங்கி சேதமடைந்ததால் மீனவருக்கு ரூ.1.25 கோடி இழப்பு ஏற்பட்டது.கடந்த இரு நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் சூறாவளி வீசுவதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுகிறது. இதனால் தங்கச்சிமடம் கடற்கரையில் நிறுத்தி இருந்த ரீஜில் என்பவரது ஆழ்கடல் விசைப்படகின் நங்கூரக் கயறு அறுந்து கரை ஒதுங்கி சேதமடைந்தது.இப்படகை மத்திய அரசு ரூ.40 லட்சம், மாநில அரசு ரூ.16 லட்சம் பங்களிப்புடன் வங்கி கடன் ரூ.16 லட்சம், மீனவர் சொந்த நிதி ரூ. 53 லட்சம் என ரூ.1.25 கோடி செலவிட்டு மீனவர் வாங்கி இருந்தார். ராமேஸ்வரம் கடல் பகுதியில் இப்படகிற்கு ஏற்ப மீன்வரத்து இல்லாமல் நஷ்டத்தில் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி இருந்தார். தற்போது சூறாவளியால் படகும் சேதமடைந்ததாக தெரிவித்தார்.ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சகாயம் கூறியதாவது:ஆழ்கடல் மீன்பிடி திட்டம் என்ற பெயரில் அதிகாரிகள் மீனவர் பங்களிப்பு ரூ.8 லட்சம் மட்டும் போதும் எனக் கூறினர். ஆனால் ரூ.69 லட்சம் செலவிட்டு படகை வாங்க வைத்தனர். இப்படகு எரிபொருள், மீனவர் சம்பளம், உணவு, பராமரிப்பு செலவுகளுக்கு ஏற்ப ஏற்ப மீன்பிடிப்பு இல்லாததால் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்தது.இதனால் பல மாதங்களாக மீன்பிடிக்காமல் 35 படகுகளை ராமேஸ்வரம், பாம்பன், நாகை, கன்னியாகுமரி கடற்கரையில் விற்பனை செய்வதற்காக நிறுத்தி வைத்துள்ளோம். ஆனால் படகை வாங்க யாரும் முன் வராததால் தற்போது சேதமடைகிறது.எனவே படகை அரசே வாங்கிக் கொண்டு வங்கிக் கடன் மற்றும் எங்களது கடனை செலுத்தினால் போதும். இதன் மூலம் மீனவர் குடும்பங்கள் கடன் தொல்லையில் இருந்து தப்புவார்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி