கொடிப்பங்கு அங்கன்வாடி மையம் கட்டடம் சேதம்
தொண்டி : தொண்டி அருகே கொடிப்பங்கு அங்கன்வாடி கட்டடம் சேதமடைந்துள்ளதால் குழந்தைகளுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக, பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.தொண்டி அருகே கொடிப்பங்கு கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து படித்து வருகின்றனர். அங்கன்வாடி கட்டடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டு பயன்பாட்டிற்கு விடபட்டது. முறையாக பராமரிக்காததால் கட்டடத்தின் மேற்பகுதி சேதமடைந்து மழை நீர் உள்ளே இறங்குகிறது. சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.கழிப்பறை வசதி மற்றும் விளையாடுவதற்கு போதிய வசதிகளும் இல்லை. எனவே பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர்.