கமுதி அருகே சேதமடைந்துள்ள பாலம்: விபத்து அச்சத்தில் மக்கள்
கமுதி: -கமுதி அருகே மருதங்கநல்லுார் விலக்கு ரோட்டில் உள்ள தரைப்பாலத்தின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதம் அடைந்துள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர். மருதங்கநல்லுாரில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள வரத்து கால்வாயை கடந்து செல்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. பின்பு முறையாக மராமத்து பணி செய்யப்படாததால் தற்போது பாலத்தின் அடிப்பகுதியில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்புகம்பி வெளியில் தெரிகின்றன. தற்போது வரத்துகால்வாய் துார்வாரப்பட்டு வருவதால் பாலம் மட்டும் சேதமடைந்து உள்ளது. மருதங்கநல்லுார், தவசிகுறிச்சி, பசும்பொன் செல்லும் வழியாக இருப்பதால் ஏராளமானோர் இவ்வழியில் செல்கின்றனர். இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.