ரயில் நிலையத்தில் சேதமடைந்த நடை மேடை: பயணிகள் தவிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் 2வது, 3வது நடைமேடைகளில் சேதமடைந்துள்ளதால் ரயிலில் ஏறுவதற்கு பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.விபத்து ஏற்படும் நிலை உள்ளது.ராமநாதபுரம் ரயில் நிலையம் வழியாக தினமும் மதுரைக்கு 3 முறை பாசஞ்சர் ரயில்களும், தினமும் சென்னை, விழுப்புரம், ரயில்களும் வாரத்திற்கு 3 முறை கன்னியாகுமரிக்கும், திருப்பதிக்கும், வாரத்திற்கு ஒரு முறை கோவைக்கும் வராந்திர ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து பயணித்து வருகின்றனர்.இதில் 2 வது நடை மேடையிலும், 3வது நடைமேடையிலும் பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் தரை தளங்கள் சேதமடைந்துள்ளது. இது போன்ற இடங்களில் பயணிகள் அவசரத்திற்கு ரயிலில் ஏறும் போது தவறி விழுந்து விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.சரக்குகள், பெட்டி, படுக்கைகளுடன் வரும் பயணிகள், சிறு குழந்தைகளுடன் வரும் பயணிகள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.ரயில்வே நிர்வாகம் நடைமேடைகளில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும், என ரயில்வே பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.