ரோட்டில் வீசப்பட்ட அரசு முத்திரையுடன் கூடிய பத்திரப்பதிவுத்துறை சிடிக்கள்
உத்தரகோசமங்கை:ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை முதுகுளத்துார் வழியாக மல்லல் செல்லும் சாலையோரத்தில் பத்திரப்பதிவுத்துறையின் அரசு முத்திரையிடப்பட்ட ஆவண சிடிக்கள் கொட்டப்பட்டு கிடந்தன.உத்தரகோசமங்கையில் இருந்து முதுகுளத்துார் செல்லும் சாலையில் தெற்கு மல்லல் அமைந்துள்ளது. நேற்று காலை 6:00 மணிக்கு அப்பகுதி இளைஞர்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது முதுகுளத்துார் மல்லல் செல்லும் வயல்வெளி ஓரங்களில் தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய பத்திரப்பதிவுத்துறைக்கு சொந்தமான முக்கிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட சிடிக்கள் ரோட்டோரம் மூன்று கி.மீ.,க்கு கொட்டப்பட்டு கிடந்தன.தெற்கு மல்லல் இளைஞர்கள் கூறியதாவது: ஜாயின்ட் -1, சப் ரிஜிஸ்டர் ஆபீஸ், ராமநாதபுரம் என முத்திரையிடப்பட்ட சிடிக்கள் 50க்கும் மேற்பட்டவை சாலையோரம் கிடந்தன. அரசின் முக்கிய ஆவணங்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளாக இருக்கும் என கருதுகிறோம். தனி நபர்களின் நிலங்கள் சம்பந்தப்பட்ட விவரங்கள் அடங்கிய முக்கிய தொகுப்புகளின் சிடியாகவும் உள்ளன. எனவே தமிழக அரசு இதுபோன்று பொறுப்பற்ற தன்மையில் அரசின் ஆவணங்களை சாலையோரம் போட்டுச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் அலட்சிய போக்கே இதற்கு காரணம். உத்தரகோசமங்கை போலீசில் சேகரிக்கப்பட்ட சிடிக்களை ஒப்படைத்துள்ளோம் என்றனர்.