கச்சத்தீவு விழாவுக்கு பக்தரிடம் கட்டணம் வசூலிக்க கூடாது
ராமேஸ்வரம்; கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் மத்திய, மாநில அரசுகள் இலவசமாக அழைத்து செல்ல வேண்டும் என நாட்டுப்படகு மீனவர்கள் வலியுறுத்தினர்.நேற்று பாம்பனில் கச்சத்தீவு பாரம்பரிய நாட்டுப்படகு திருப்பயணக்குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கச்சத்தீவு திருவிழாவுக்கு பாரம்பரிய மீனவர்கள் குடும்பத்துடன் 20 நாட்டுப்படகில் பங்கேற்க வேண்டும். திருவிழாவுக்கு விசைப்படகில் அழைத்து செல்லும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதை தவிர்த்து மத்திய, மாநில அரசுகள் ஏற்பாட்டில் கப்பலில் இலவசமாக அழைத்து செல்ல வேண்டும். திருவிழாவுக்கு செல்லும் நாட்டு படைகளுக்கு தமிழக அரசு இலவசமாக 100 லிட்டர் டீசல் வழங்க வேண்டும்.கடந்தாண்டு பாதுகாப்பு கருதி நாட்டுப்படகில் செல்ல அரசு தடை விதித்தது வேதனைக்குரியது. இதனால் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் தவித்தனர். இதனை தவிர்க்க உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கச்சத்தீவு விழாவுக்கு நாகப்பட்டினத்தில் இயங்கும் கப்பல் மூலம் அழைத்துச் செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் விசைப்படகில் கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீனவர்கள் சங்க நிர்வாகி சின்னதம்பி, ஓலைக்குடா மீனவர் சங்க தலைவர் செரோன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.