திருவாடானை கோயிலில் நடை தளத்தில் மழை நீர் பக்தர்கள் கவலை
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கூரையிலிருந்து மழை நீர் வடிவதால் பக்தர்கள் கவலையடைந்தனர். திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. பிரதோஷம் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். முகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறுவதால் மக்கள் அதிகமாக கூடுவார்கள். இரு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 கோடியில் கோயிலை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதி மூலம் சுற்றுப் பிரகாரத்தில் நடைபாதையில் கற்களும், சிநேகவல்லி அம்மன் கோயில் மேற்பகுதியில் தட்டோடும் பதிக்கப்பட்டது. ஆதிரெத்தினேஸ்வரர் வெளி மண்டபம் பகுதியில் பணிகள் நடைபெறவில்லை. இதனால் மேற் பகுதியில் செடிகள் வளர்ந்து விரிசல் பெரிதாகியதால் மழை நீர் உள்ளே இறங்குகிறது. கடந்த இரு நாட்களாக பெய்த மழையால் நீர் வடிந்ததால் பக்தர்கள் கவலையடைந்தனர். இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: கோயில் மேல்தளத்தில் தட்டோடுகள் சேதமடைந்ததால் மழை நீர் வடிகிறது. ஆங்காங்கே செடிகள் வளர்ந்து விரிசல் பெரிதாகி வருகிறது. பிராகரம் முழுவதும் தண்ணீராக இருப்பதால் பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்ய முடியவில்லை. நடந்து செல்லும் தளத்திலும், 100 துாண்கள் உள்ள மண்டபத்திலும் நீர் தேங்கியுள்ளது. இனிவரும் நாட்களில் மழை அதிகமாக பெய்தால் பாதிப்பு ஏற்படும். கோயிலை புனரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.