ரேஷன் கடை கூரை இடிந்து பணியாளர் காயம் முன்பே சுட்டிக்காட்டியது தினமலர்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே புளியங்குடி கிராமத்தில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டடத்தால் ஆபத்து குறித்து தினமலர் நாளிதழ் முன்பே சுட்டிக்காட்டிய நிலையில் தற்போது கூரை இடிந்து பணியாளர் காயம் அடைந்தார்.முதுகுளத்துார் அருகே புளியங்குடி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடைக்கு கட்டட வசதி இல்லாததால் மக்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து 2 ஆண்டுகளாக ஊராட்சி கட்டடத்தில் ரேஷன் கடை செயல்படுகிறது.தற்போது இந்த கட்டடம் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இங்கு பொருட்கள் வாங்க வரும் மக்கள், பணியாளர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் நவ.28 ல் படத்துடன் செய்தி வெளியானது.நேற்று இந்த கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் பணியாளர் வேலுச்சாமி கையில் காயம் ஏற்பட்டது. அப்போது காத்திருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். தினமலர் நாளிதழில் முன்கூட்டியே செய்தி வெளியாகி இருந்த நிலையில் கட்டடம் இடிந்து விழுந்து பணியாளர் காயமடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.எனவே மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய கட்டடம் கட்டுவதற்கு முன் தற்காலிக கட்டடத்தில் ரேஷன் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.