உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போலி நிதி நிறுவனங்களிடம் ஏமாற வேண்டாம்; பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவுரை

போலி நிதி நிறுவனங்களிடம் ஏமாற வேண்டாம்; பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவுரை

திருவாடானை; போலி நிதி நிறுவனங்களிடம் ஏமாற வேண்டாம் என்று ராமநாதபுரம் பொருளாதார குற்றபிரிவு போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி அறிவுரை வழங்கினர். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைகாட்டி போலி நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின் முதிர்வு காலத்தில் பணத்தை திருப்பித் தராமல் நம்பிக்கை மோசடி செய்கின்றனர். இது குறித்து அந்த நிறுவனங்களிடம் பணத்தை கட்டி ஏமாற வேண்டாம் என்று போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். இது குறித்து ராமநாதபுரம் பொருளாதார குற்றபிரிவு சிறப்பு எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் கூறியதாவது: இதுபோன்றவர்களிடம் திருவாடானை பகுதியை சேர்ந்தவர்கள் அதிகமாக பணத்தை இழந்துள்ளனர். இப்பகுதியிலிருந்து அதிகமான புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மக்களை ஏமாற்றும் வகையில் அவர்களின் ஆசையை துாண்டி மோசடி செய்யும் போலி நிதி நிறுவனங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் டெபாசிட் வாங்குவதற்கு அதிகாரமுள்ள நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி பகுதியில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். மோசடியில் ஈடுபட்ட இப்பகுதியை சேர்ந்த சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி வருகிறோம். போலி நிதி நிறுவனங்கள் நடத்துவோர் பற்றி தகவல் தெரிந்தால் ராமநாதபுரம் பொருளதார குற்றபிரிவு அலுவலகத்தில் புகார் செய்யலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி