தடையை மீறி தனுஷ்கோடியில் தினமும் பறக்கும் ட்ரோன்: பாதுகாப்பு கேள்விக்குறி
ராமேஸ்வரம்:போலீசாரின் அலட்சியத்தால் தடையை மீறி தனுஷ்கோடி கடல் பகுதியில் தினமும் ட்ரோன்கள் பறப்பதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இருந்து இலங்கை கடற்பகுதி குறைவான துாரமே உள்ளதால் பாதுகாப்பு கருதி இங்கு 'ட்ரோன்' பறக்க தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் தனுஷ்கோடியில் புதுமண தம்பதிகளின் போட்டோ, வீடியோ ஆல்பம் மற்றும் புதிய பொருள்களை விளம்பரபடுத்த சில தனியார் குழுவினர் 'ட்ரோன்' பறக்கவிட்டு வீடியோ எடுக்கின்றனர்.இவர்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் நின்றபடியும், நாட்டுப்படகில் தனுஷ்கோடி கடலில் மணல் தீடைக்கு சென்று அங்கிருந்து 'ட்ரோனை' விட்டு இலங்கை கடல் பகுதி வரை பதிவு செய்கின்றனர். இதனால் வரும் காலத்தில் இலங்கை பகுதியில் இருந்தும் 'ட்ரோன்'களை நம் கடல் எல்லைக்குள் பறக்க விடும் அபாயம் உள்ளது. தற்போது தனுஷ்கோடியில் தினமும் 'ட்ரோன்'களை பறக்கவிடுபவர்கள் யார், இவர்களின் பின்னணி குறித்த விபரத்தை கூட போலீசார் சேகரிக்காததால் வரும் காலத்தில் இக்கடல் வழி பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை தனுஷ்கோடியில் பிரபல நிறுவனத்தின் லாரியை விளம்பரப்படுத்த தடையை மீறி 'ட்ரோனில்' வீடியோ எடுத்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் இவர்கள் மீது வழக்கு பதியாமல் எச்சரித்தும், மன்னித்தும் சில மணி நேரத்திற்கு பின் அனுப்பினர்.