மாரியூர் அரசு பள்ளியில் பராமரிப்பு பணி தேவை கண்டுகொள்ளாத கல்வித் துறை
சாயல்குடி : சாயல்குடி அருகே மாரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டிய நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.இப்பள்ளியில் 6 முதல் பிளஸ்-2 வரை உள்ளது. 400க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி கட்டடத்தில் பெரும்பாலான இடங்களில் கூரை பூச்சு சேதமடைந்தும் எவ்வித பராமரிப்பு பணிகளும் இல்லாததால் கட்டடம் பொலிவிழந்து வருகிறது.பள்ளியின் பின்புறப் பகுதிகளில் ஜன்னல்கள் சேதம் அடைந்தும் பெயின்ட் அடிக்காமல் கருமையாக உள்ளது. மாரியூரை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகி மரைக்காயர் கூறியதாவது: இங்கு 2011ல் கட்டப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் பராமரிப்பின்றி கட்டடம் நாளுக்கு நாள் சேதம் அடைந்து வருகிறது. இங்கு மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்கக்கூடிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.இதனால் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இயலாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. பள்ளிக்கான இரவு காவலர் இல்லாமல் உள்ளதால் பாதுகாப்பில் கேள்விக்குறி உள்ளது. எனவே இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்யாமல் மெத்தனப் போக்கில் உள்ளனர். எனவே மாணவர்களின் நலன் கருதி சேதமடைந்த பள்ளி கட்டடத்தில் பராமரிப்பு பணிகளை செய்யவும், குறைகளை நிவர்த்தி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.