மின்தடை அறிவிப்பு, ரத்து அலட்சியம் காட்டும் மின்துறை பரமக்குடியில் வியாபாரிகள், மக்கள் குழப்பம்
பரமக்குடி : பரமக்குடியில் மின்வாரிய அதிகாரிகள் மின்தடை அறிவிப்பு கொடுப்பதும், மறுநாள் ரத்து என அறிவிப்பது வியாபாரிகள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பரமக்குடி காட்டுபரமக்குடியில் 110 கே.வி., உபமின் நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து பரமக்குடி, சத்திரக்குடி, நயினார்கோவில், எமனேஸ்வரம், மஞ்சூர், கமுதக்குடி உள்ளிட்ட ஊரக பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து புதிய மின் இணைப்பு கொடுப்பது மற்றும் மின் கம்பங்கள் மாற்றம் என அறிவிப்பில்லாத மின்தடை உள்ளது. இந்நிலையில் மின் பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் மின்தடை அறிவிப்பு கொடுக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு நாளிதழ்களில் பிரசுரம் ஆவதால் மக்களை சென்றடைகிறது. ஆனால் கடந்த ஆக., 30, செப்., 3 மற்றும் 23ம் தேதிகளில் இதே போன்ற மின்தடை அறிவிப்பு வழங்கப்பட்டது. அறிவிப்பு வெளியான மறு நாளே நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக மின் தடை ரத்து என்ற அறிவிப்பையும் கொடுக்கின்றனர். இதனால் நாளிதழ்களில் வரும் அறிவிப்பு நம்பகத் தன்மையற்றதாக மாறுவதுடன், செய்திக்கான முக்கியத்துவத்தை உணராமல் மின்துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர். இது பொதுமக்கள், வியாபாரிகள் இடையே குழப்பத்தை உண்டாக்குகிறது. இச்சூழலால் சிறு மற்றும் குறு தொழில் புரிவோர் பாதிப்படைகின்றனர். ஆகவே மின்வாரிய அதிகாரிகள் மின்தடை அறிவிப்பை உறுதி செய்த பின் வெளியிட்டால் அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பாக இருக்கும்.