பரமக்குடியில் 3 மணி நேரம் மின் துண்டிப்பால் பாதிப்பு போராடி சீரமைத்த மின் ஊழியர்கள்
பரமக்குடி: பரமக்குடியில் நேற்று 3:00 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மின் ஊழியர்கள் போராடி மின் துண்டிப்பை சரி செய்தனர். பரமக்குடி நகராட்சி காட்டு பரமக்குடியில் உப மின் நிலையம் செயல்படுகிறது. நேற்று மாலை 4:00 மணிக்கு லேசான காற்றுடன் மழை பெய்தது. அப்போது 4:15 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மூன்று மணி நேரம் வரை தொடர்ந்தது. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியில் மின் இணைப்பு வழங்கப்பட்ட போதும் வைகை ஆறு சர்வீஸ் ரோட்டை ஒட்டிய பகுதியில் மின் தடை நீடித்தது. இப்பகுதியில் பெரிய பஜார், நெசவாளர்கள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளதால் வியாபாரம், தொழில் பாதிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில், தென்னை மரம் உள்ளிட்ட மரங்களின் கிளைகள் உயர் மின் அழுத்த கம்பியில் விழுகின்றன. அப்போது மின்தடையை சீர் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. உயரழுத்த மின் கம்பிகள் மற்றும் வீடு, கடை உள்ளிட்ட ஒயர்கள் மீது மரக்கிளைகள் இருப்பின் அவற்றை அகற்றி வருகிறோம். இது குறித்து அந்தந்தப் பகுதி மக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு கிளைகளை அகற்ற தெரிவிக்க வேண்டும் என்றனர். மின் வாரிய ஊழியர்கள் பற்றாக்குறையால் இரவு நேர மின்தடையை சரி செய்வது சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆகவே காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.