அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் ஆக்கிரமிப்பு கடைகள்
சாயல்குடி: சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் ஆம்புலன்ஸ்கள் சென்று திரும்புவதில் இடையூறு ஏற்படுகிறது. சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் புற நோயாளிகளாக பரிசோதனை செய்வதற்காக வருகின்றனர். மாவட்டத்தில் அதிக பிரசவம் நடக்கும் மருத்துவமனையாக சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திகழ்கிறது. இந்நிலையில் சனிக்கிழமை தோறும் நடக்கக்கூடிய வாரச்சந்தை நாட்களில் சிரமத்துடன் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி கூறியதாவது: சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாயல்குடி போலீசாருடன் இணைந்து செயல்பட உள்ளோம் என்றார்.