ராமநாதபுரத்தில் சாகுபடி பணி துவங்கியும் விதை நெல் விற்பனை மந்தம்! அரசு கொள்முதல் செய்திட விவசாயிகள் வலியுறுத்தல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் சாகுபடி பணி துவங்கிய போதும் விதை நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பு வைத்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நெல் மூடைகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்டத்தில் மானாவாரியாக, கண்மாய் பாசனத்தில் ஆண்டு தோறும் 3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழையை நம்பி அக்.,க்கு முன்னதாகவே விவசாயிகள் ஆடிப் பெருக்கில் பரம்பு அடித்து, உழுது வயலை தயார் செய்து செப்.,ல் நெல் விதைக்கின்றனர். இதற்காக குறிப்பிட்ட நெல் ரகங்களின் விதைகளை விவசாயிகள் இருப்பு வைத்து விதை நெல்லாக ஆண்டு தோறும் விற்று கணிசமான வருவாய் ஈட்டுகின்றனர். இந்நிலையில் இவ்வாண்டு ஊருணி, கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் விதைப்பு பணிகள் வேகம் எடுக்கவில்லை. இதனால் விதை நெல் விலை சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் மூடை(62 கிலோ) ரூ.2000 வரை விற்றது. தற்போது ரூ.1300க்கு கூட வாங்குவதற்கு ஆளின்றி விவசாயிகள் நெல் விதை இருப்பு வைத்த விவசாயிகள் இழப்பை சந்தித்துள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரமாவட்ட வேளாண்மை உற்பத்தி மற்றும் குறைதீர் குழு உறுப்பினர் ஏ.வீரமணி கூறியதாவது: மாவட்டத்தின் நெற் களஞ்சியம் என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை தாலுகா விவசாயிகள் பி.பி.டி.5204 என்ற டீலக்ஸ் நெல்லை சாகுபடி செய்து விதை நெல்லாக டன் கணக்கில் இருப்பு வைத்து செப்., அக்., மாதங்களில் விற்பனை செய்வது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு 62 கிலோ மூடையை ரூ. 1300க்கு கூட வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார். --