கோடைகாலத்தில் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் பண்ணை குட்டைகள்
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே சுற்றுவட்டாரத்தில் விவசாயிகளுக்கு கோடைகாலத்திலும் தண்ணீர் கிடைக்கும் வகையில் அதிக அளவு பண்ணை குட்டைகள் அமைக்கப் பட்டுள்ளன. உத்தரகோசமங்கை, நல்லிருக்கை, பனையடியேந்தல், ஆலங்குளம், மரியராயபுரம், இதம்பாடல் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பண்ணை குட்டைகள் அமைக்கப் பட்டுள்ளன. ரூ. ஒரு லட்சத்து 40 ஆயிரத்தில் பண்ணை குட்டைகளை வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்குகின்றனர். விவசாயிகள் கூறியதாவது: கோடைகாலத்தில் பெரும்பாலான பகுதிகள் வறட்சியை சந்திக்கும் நிலையில் பண்ணை குட்டைகள் கை கொடுக்கின்றன. கோடையிலும் பெய்யக்கூடிய மழையால் பண்ணை குட்டையில் தண்ணீர் நிரம்புகிறது. இவற்றின் மூலமாக மிளகாய், பருத்தி, மல்லி உள்ளிட்ட தானிய வகைகளை சாகுபடி செய்து கோடை கால பயிருக்கு பயன்படுத்திக் கொள் கிறோம். பண்ணை குட்டையின் மூலமாக ஒரு சில இடங்களில் நாட்டுரக கெண்டை, கெளுத்தி, குரவை உள்ளிட்ட மீன்களும் அவற்றில் விட்டு வருமானம் கிடைக்கிறது. விளைநிலங்களுக்கு நடுவே பண்ணை குட்டைகள் அமைக்கப்படுகின்றன. 20 அடி அகலத்திலும் 30 அடி நீளத்திலும் அமைக்கப்படும் பண்ணை குட்டை கோடையிலும் வற்றாமல் இப்பகுதி உள்ள நிலங்களுக்கு பயன் அளிப்பதாக உள்ளது, என்றனர்.