| ADDED : நவ 09, 2025 06:04 AM
திருவாடானை: ஒரு மூடை நெல் விலையை காட்டிலும் ஒரு மூடை உரம் விலை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் கூறினார். அவர் கூறியதாவது: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது. இப்பணியை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இதை எதிர்த்து ராகுல்காந்தி பல பேராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன், காங்., தொகுதி பங்கீடு குறித்து தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். திருவாடானை தொகுதியை காங்.,க்கு ஒதுக்க வலியுறுத்தப்படும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது அலுவலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சில மனுக்கள் காணவில்லை என்ற குற்றசாட்டு குறித்து அலுவலர்களுக்கு தகவல் தெரியப்படுத்தப்படும். கிராமங்கள் தோறும் சென்று மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்காததால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதைவிட உரங்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒரு மூடை நெல் விலை ரூ.1200. ஆனால் ஒரு மூடை உரவிலை ரூ.1600. இது குறித்து பல முறை சட்டசபையில் பேசியுள்ளேன். தீர்த்தாண்டதானம் கடற்கரையில் பக்தர்கள் நீராட படித்துறை கட்ட மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அனுமதி அளித்தவுடன் படித்துறை கட்டப்படும். தொண்டியில் பஸ்டெப்போ கட்டும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இத் தொகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதல் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.