மிளகாய் உலர் களம் இன்றி விவசாயிகள் பாதிப்பு
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் இல்லாதததால் மிளகாய் வத்தல் உலர்த்துவதில் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுப்புற கிராமங்களான புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, மேலமடை, செட்டியமடை, ஆவரேந்தல், சவேரியார் பட்டினம், செங்குடி, வரவணி, கூட்டம்புளி, சேத்திடல், எட்டிய திடல், முத்துப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டு தோறும் அதிகளவில் மிளகாய் சாகுபடி நடக்கிறது. சாகுபடி செய்யப்படும் மிளகாய் செடிகள் மகசூல் நிலையை அடைந்ததும், செடிகளில் இருந்து பறிக்கப்படும் மிளகாய் பழங்கள், சூரிய ஒளியில் ஐந்து முதல் 7 நாட்கள் வரை உலர்த்தப்படும் போது, மிளகாய் வத்தலாக மாறுகிறது. இந்த வகையில், மிளகாய் பழங்களை கிராமப் பகுதிகளில் உலர்த்துவதற்கு மிளகாய் உலர் களம் இல்லை. இதனால் விவசாயிகள் வயல்வெளிகள், கண்மாய் கரைகள், மேடான மண் மேடுகள் உள்ளிட்டவைகளில் பழங்களை உலர்த்தி வருகின்றனர்.இதனால் ஒரே சீராக மிளகாய் பழங்கள் உலர்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு ஏற்படும் சிக்கலை போக்கும் விதமாக மிளகாய் சாகுபடி அதிகம் உள்ள கிராமப் பகுதிகளில் அரசு மிளகாய் உலர் களம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர்.