உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உற்பத்தி செலவிற்கேற்ற விலையின்றி விவசாயிகள் பாதிப்பு

உற்பத்தி செலவிற்கேற்ற விலையின்றி விவசாயிகள் பாதிப்பு

விவசாயிகள் கிசான் கார்டு மூலமாக பயிர்க்கடன் பெறுவதற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் சிபில்ஸ்கோர் அறிக்கை பெற வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் பாக்கியநாதன் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் நெல், கரும்பு, மிளகாய், பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு பயிர்க்கடன் பெற்று சாகுபடி செய்து வருகின்றனர். நகைக்கடன், விசைத்தறி கடன், கால்நடைக்கடன் என்ற மூலதனக்கடன்கள் வழங்கப்படுகின்றன. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உரிய ஆவணங்களை பெற்று தான் கடன் வழங்கப்படுகிறது. ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் வரை செலவிடப்பட்டாலும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. மீதமுள்ள தொகையை விவசாயிகள் தேசிய வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கி பயிர் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். பருவ நிலை மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள், பல்வேறு நோய் தாக்குதல்கள், இடர்பாடுகளை கடந்து சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டாலும் உற்பத்தி செலவிற்கேற்ற விலையின்றி விவசாயிகள் படும் அவஸ்தைகளும், வேதனைகளும் தொடர்கின்றன.மே 26ல் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பயிர்க்கடன் பெற சிபில்ஸ்கோர் அறிக்கை பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகும். விவசாயிகளை பாதிப்படைய செய்யும் சிபில்ஸ்கோர் அறிக்கை கேட்பதை ரத்து செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை