ஆக்களூர் குரூப்பில் நிரந்தர வி.ஏ.ஓ., இல்லை அடங்கல் வாங்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
திருவாடானை: திருவாடானை தாலுகா ஆக்களூர் குரூப்பில் நிரந்தர வி.ஏ.ஓ., இல்லாததால் மூவிதழ் அடங்கல் வாங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீடு வழங்க வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காப்பீடு செய்ய நவ.,15 கடைசி நாளாக இருப்பதால் திருவாடானை தாலுகாவில் விவசாயிகள் ஆர்வமாக பதிவு செய்யத் துவங்கியுள்ளனர். ஆதார் அட்டை, கணினி சிட்டா, அடங்கல், வங்கி சேமிப்பு புத்தக நகல் ஆகியவற்றை தயார் செய்து பதிவு செய்து வருகின்றனர். இதில் மூவிதழ் அடங்கல் வி.ஏ.ஓ.,க்களிடம் வாங்க வேண்டும். இத்தாலுகாவில் ஆக்களூர் குரூப்பில் நிரந்தர வி.ஏ.ஓ., இல்லை. புல்லுார் குரூப் வி.ஏ.ஓ., கூடுதல் பொறுப்பேற்றுள்ளதால் ஆக்களூர் கிராம விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கட்டிவயல் முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம் கூறியதாவது: ஆக்களூர் குரூப்பில் கட்டிவயல், எட்டுகுடி, ஆக்களூர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பொதுவாக கிராமங்களுக்கு வி.ஏ.ஓ.,க்கள் நேரடியாக சென்று மூவிதழ் வழங்குவது வழக்கம். ஆனால் ஆக்களூர் குரூப்பில் நிரந்தர வி.ஏ.ஓ., இல்லாததால் இப்பகுதி விவசாயிகள் புல்லுார் குரூப் வி.ஏ.ஓ., விடம் அடங்கல் வாங்க செல்ல வேண்டியதுள்ளது. இதனால் வயதான விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். எனவே ஆக்களூருக்கு நிரந்தர வி.ஏ.ஓ. நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.