ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை நீர்: விவசாயிகள் வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை உபரி நீரை கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெற்ற ஆர். எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தேக்கப்படும் முழு கொள்ளளவான 1205 மில்லியன் கன அடி தண்ணீரால் 12,142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. சூரியன் கோட்டை, சருகணி ஆறுகள், வைகை ஆறு அரசடி வண்டல் கீழ் நாட்டார் கால்வாய் வழியாக உபரி நீர் கிடைக்கிறது. பருவ மழையால் மட்டுமே இந்த கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதில்லை. வைகை நீர் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் இருந்து சருகணி ஆறு வழியாக வரும் உபரி நீரால் மட்டுமே இந்த கண்மாய் கடந்த காலங்களில் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சில நாட்களாக மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் 6.5 அடி கொண்ட பெரிய கண்மாயில் தற்போது ஒரு அடி தண்ணீர் மட்டுமே தேங்கியுள்ளது. வைகை அணை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இரண்டு நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் வைகை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. எனவே, வைகை ஆற்றில் திறக்கப்பட்ட வைகை நீரை ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய்க்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் வலியுறுத்தினர்.