பயிர் காப்பீடுக்கு கூடுதல் அவகாசம் தேவை: விவசாயிகள் வலியுறுத்தல்
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் 26,650 எக்டேரில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு உரிய காப்பீடு வழங்க வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாலுகாவில் விவசாயிகள் ஆர்வமாக பதியத் துவங்கினர். ஆனால் பல்வேறு காரணங்களால் பயிர் காப்பீடு செய்ய முடியாததால் கூடுதல் அவகாசம் தர விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கவாஸ்கர் கூறியதாவது: திருவாடானை தாலுகாவில் ஆக்களூர், அரும்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குரூப்களில் நிரந்தர வி.ஏ.ஓ.,க்கள் இல்லாததால் கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றுகின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு சில வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர இ-சேவை மையங்களில் சர்வர் பிரச்னையால் பதிவு செய்ய முடியவில்லை. பல்வேறு காரணங்களால் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். கடைசி தேதிக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் அனைத்து விவசாயிகளும் பதிவு செய்ய முடியாது. ஆகவே காப்பீடு செய்ய கூடுதல் அவகாசம் தேவை என்பதால் தேதியை நீட்டிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.