பரமக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் சமாதானக் கூட்டம் முதல்வர் முன் ஆர்ப்பாட்டம் எதிரொலி
பரமக்குடி: பரமக்குடி அருகே பார்த்திபனுார் பகுதியில் முதல்வர் வருகையின் போது விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த நிலையில் நேற்று ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடந்தது. அக்.,30ல் பசும்பொன் வரும் முதல்வர் ஸ்டாலின் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர். இதன்படி நேற்று ஆர்.டி.ஓ., சரவணபெருமாள் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அப்போது காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் பொருட்டு 7 மாவட்டங்களுக்கு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு 5 ஆண்டுகளாக அரசு நிதி ஒதுக்காதது குறித்து மாவட்ட கலெக்டர் மூலமாக முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். காட்டு பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சீமைக்கருவேல மரங்களை அகற்ற பட்டாதாரர்கள் மற்றும் அரசு துறைக்கு அறிவுறுத்தப்படும். கமுதி தாலுகாவில் மிளகாய் பயிருக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பெட்ரோல் கிணறுகள், நிலக்கரி சுரங்கங்கள் தோண்டும் திட்டங்களை நிரந்தரமாக தடை செய்ய மாவட்ட கலெக்டரிடம் எடுத்துரைக்கப்படும் என்றனர். இதில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், டி.எஸ்.பி., சபரிநாதன், தாசில்தார் வரதன், வேளாண்மை, வனத்துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.