உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்த வைக்கோல் பந்து பயன்படுத்தும் விவசாயிகள்

 நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்த வைக்கோல் பந்து பயன்படுத்தும் விவசாயிகள்

ஆர்.எஸ்.மங்கலம்: நெல் வயல்களில் வைக்கோல் பந்துகளை தயார் செய்து எலிகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தற்போது மகசூல் நிலையை எட்டியுள்ளன. இந்நிலையில், பெரும்பாலான நெல் வயல்களில் பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேக்கப்பட்டுள்ள மகசூல் நிலையில் உள்ள நெற்பயிர்களை எலிகள் சேதப்படுத்துவது அதிகரித்து வருகிறது. வயலின் பல்வேறு பகுதிகளிலும் எலிகள் நெற்பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நெற்பயிர்களை எலிகளிடம் இருந்து காப்பாற்றும் விதமாக ஆர்.எஸ். மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதி விவசாயிகள் நெல் வயல்களில் நீண்ட கம்புகளில் வைக்கோல் பந்துகளை சுற்றி நெற்பயிர்களின் இடையில் ஆங்காங்கே நட்டு வைத்துள்ளனர். இதன் மூலம் காகம், பருந்து உள்ளிட்ட பறவைகள் விவசாயிகள் நடவு செய்துள்ள வைக்கோல் பந்துகளில் அமர்ந்தவாறு வயல்களில் உள்பகுதியில் உலாவும் எலிகளை பிடித்து விடுகின்றன. இதனால் எலிகள் பயிர்களை சேதப்படுத்துவது கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த முறையை முன்னோர்கள் காலம் தொட்டு விவசாயிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ